ஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஒரு ஆளாக நெல் பயிர்களை நட்டிருக்கும் கல்லூரி மாணவிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகில் உள்ளது அக்கரைவட்டம் கிராமம். இது முழுவதும் விவசாயத்தை சார்ந்த கிராமம். நிலத்தடி நீர் வற்றியதால் ஆழ்குழாய் பாசனத்திலேயே விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேசிய ஊராக வேலைகளில் பெண்கள் அதிகம் ஈடுபட்டு வருவதால் நெல் நடவு மற்றும் விவசாய வேலைகளுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பெரிய விவசாயிகள் அதிகமான நிலம் உள்ளவர்கள் இயந்திரங்களைக் கொண்டு நடவுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் ஒரு ஏக்கர் இரு ஏக்கர் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இயந்திர நடவு என்பது கனவு தான்.
இந்தநிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி விவசாயத்தில் அனைவருக்கும் ஒரு ஈர்ப்பு வரவேண்டும் என்பதை வலியுறுத்த ஒரு சாதனையை செய்துள்ளார். விவசாயி கருப்பையா தனது வயலில் நெல் நடவுக்காக வயலை உழுது தயார்படுத்திய நிலையில் நடவுக்கு ஆள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவரது மகளான ஒரத்தநாடு அரசு கல்லூரியில் பி.எஸ்.சி கணக்கு இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி ராஜலெட்சுமி நம்ம வயல்ல நான் ஒரே ஆளே நடவு செய்கிறேன் என்று சுடிதாருடன் வயலில் இறங்கிவிட்டார். தந்தை நாற்று கட்டுகளை வயலில் வீச ஒரு ஏக்கர் உழுத நிலத்தில் ஒற்றை ஆளாய் நடவுப் பணியை தொடங்கினார். 3 நாட்களில் முழுமையாக நட்டு முடித்துவிட்டு கல்லூரிக்கு கிளம்பிச் சென்றார். இந்த தகவல் அப்படியே பரவ அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.
இது குறித்து மாணவி ராஜலெட்சுமி கூறும் போது..
நான் படிக்க போனாலும் வீட்டில் நடக்கும் விவசாய வேலைகளில் அதிகமாக ஈடுபடுவேன். விடுமுறை நாட்களில் விவசாய வேலைகளில் முழுமையாக இருப்பேன். இப்போது 100 நாள் வேலைக்கு எல்லாரும் போயிடுவதால விவசாய வேலைக்கு ஆள் பற்றாக்குறை. இன்னொரு பக்கம் கூலியும் அதிகம். அதனாலயே நிறைய விவசாயிகள் நிலங்களை தரிசாக போட்டு வைத்திருக்கிறார்கள். எங்க நிலத்திலும் நடவுக்கு ஆள் கிடைக்கல நாற்ற பறிச்சாச்சு அப்பறம் என்ன செய்றது. அதனால் தான் நானே இறங்கி நடவு நட்டு முடிச்சுட்டேன். இதேபோல கிராமங்களில் உள்ள எல்லா மாணவிகளும் விவசாய வேலைகளிலும் தொடர்ந்து ஈடுபனும் என்பது என் விருப்பம். படிப்பும் முக்கியம் அதைவிட விவசாயம் ரொம்ப முக்கியம் என்றார்.
கிராமங்களில் உள்ள மாணவிகள் கூட இன்று விவசாய வேலைகளை ஒதுக்கி வைக்கிற நிலையில் ஒரு விழிப்பணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் கல்லூரி மாணவி ராஜலெட்சுமி. விவசாய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் அதன் பிறகு அவர்களும் சேற்றில் இறங்கி நடவு செய்வார்களா என்பது தெரியாது. ராஜலெட்சுமியில் விழிப்புணர்வு விவசாய ஆர்வலர்களுக்கும், மாணவ சமுதாயத்திற்கும் ஊக்கமாக இருக்கும் என்பதே உண்மை.