சென்னையில் கடந்த திங்கட்கிழமை சாலையோரம் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரிடம் காதல்ஜோடி ஒன்று செல்போனை வழிப்பறி செய்த சம்பவத்தில் கஞ்சா போதைக்கு ஆளான முதலாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி காதலனுடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் இறங்கியது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் அழகு நிலையம் வைத்திருப்பவர் பிரசன்னா லிப்சா. இவர் தனது தோழியுடன் தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் கடந்த திங்கட்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தார். அப்போது பைக்கில் ஒரு பெண்ணுடன் வந்த இளைஞன், லிப்சா கையில் வைத்திருந்த செல்போனை கண்ணிமைக்கும் நேரத்தில் சடார் என பறித்துக்கொள்ள, வீர் என அந்த பைக்கில் பறந்தது அந்த காதல் ஜோடி. இதனால் அதிர்ந்து போன லிப்சா அருகிலுள்ள தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தார். அப்போது கிடைத்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன், தலைமை காவலர் பொன்னுவேல் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்த தொடங்கியது.
அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் எங்கிருந்து பயணித்து வந்தனர் என ஆராய்ந்தபோது அசோக் நகர் வழியாக கிண்டி வந்ததும், அங்கு கத்திபாராவில் இதேபோல் ஒரு பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டு அதேபோல் இங்கும் வழிப்பறி திருட்டை அரங்கியேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சியில் கிடைத்த அந்த இருசக்கர வாகன எண்ணை கொண்டு ஆராய்ந்ததில் அந்த வாகனம் வேளச்சேரியை சேர்ந்த மோகன் என்பவரது வாகனம் என்பதும், அதையும் இந்த காதல் ஜோடி ஞாயிற்றுகிழமை இரவு திருடி, திருட்டு வாகனத்தில் வலம் வந்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் பட்டியலில் உள்ள பழைய குற்றிவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட அந்த நபர் ராஜா என்பதும், அந்த பெண் சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு விஸ்காம் பயின்று வரும் மாணவி சுவாதி என்றும் தெரியவந்தது. மேலும் அந்த பெண் வேறொரு செயின் பறிப்பில் ஈடுபடும் நபருடன் சுற்றி திரிந்தவர் என்றும் தெரியவந்தது. அந்த பெண்ணின் விடுதியை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் அந்த விடுதியை ஒரு வாரத்திற்கு முன்புதான் காலிசெய்தார் என்ற தகவல் கிடைக்க அந்த பகுதியிலேயே போலீசார் ஒருவாரம் தீவிர தேடலில் ஈடுப்பட்டனர்.
அப்போது அதேபகுதியில் திருடப்பட்ட இருசக்கர வாகனம் ஒரு வீட்டின் முன்பு நின்றிருக்க, அந்த வீட்டில் சென்று போலீசார் பார்த்தபோது வழிப்பறியில் ஈடுபட்ட ராஜாவும், கல்லூரி மாணவி சுவாதியும் கஞ்சா போதையில் தள்ளாடிய நிலையில் கிடந்தனர். உடனடியாக அவர்கள் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு போதை தெளியும் வரை காத்திருந்தது காவல்துறை. போதை தெளிந்த பிறகுதான் தாங்கள் கைது செய்யப்பட்டோம் என்று அவர்களுக்கே தெரியவந்தது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜா சுவாதிக்கு இன்ஸ்டாவில் பழக்கமாகியுள்ளான். ராஜா டேட்டூ வரையும் வேலை செய்து வந்ததாகவும் இருவரும் நேரில் பழகி காதலர்களாக சுற்றி திரிந்த நிலையில் போதைக்கு அடிமையான இருவரும் சாலையில் தனியாக செல்லும் பெண்களிடம் செல்போனை பறித்து பர்மா பஜாரில் விற்று அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு கஞ்சா போதை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது.
கரூரில் இருந்து சென்னை வந்து முதலாம் ஆண்டு பயின்று வந்த கல்லூரி மாணவி கஞ்சா போதைக்கு அடிமையாகி இப்படி வாழ்விழந்து, கல்வியை இழந்து சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளியிருக்கிறது இந்த போதை கலாச்சாரம்.