நெடுவாசல் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கள்ளதனமாக மது விற்பனை செய்யக் கூடாது என்றும் கிராம கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று கிராம சபைக் கூட்டம் தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட டாஸ்மாக் மேலாளர், வட்டாட்சியர் உள்பட பலரிடம் மனு கொடுத்த பொதுமக்கள் கிராம கூட்டத்திலும் முடிவெடுத்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் 17 ந் தேதியுடன் டாஸ்மாக் கடை இயங்காது என்று உறுதி அளித்தனர். அதனால் 18 ந் தேதி டாஸ்மாக் கடையை திறந்தால் முற்றுகையிடப்போவதாக பொதுமக்கள் அறிவித்தனர். ஆனால் 18 ந் தேதி டாஸ்மாக் கடை திறக்கவில்லை. ஆனால் கடையை நிரந்தரமாக மூட கால அவகாசம் வேண்டும் என்று மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் வட்டாட்ச்சியர் ரெத்தினாவதி ஆகியோர் கிராம மக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மாவட்ட ஆட்சியரின் கவணத்திற்கு கொண்டு செல்வதாக பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் சென்றனர்.
டாஸ்மாக் மேலாளர் கிராம மக்களின் முடிவை மாவட்ட ஆட்சியர் கணேசிடம் கூறிய பிறகு கிராம பொதுமக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று கூறுவதால் அந்த கடையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்தார். அதன் பிறகு அடுத்த நாள் காலை அவசர கிராம கூட்டத்திற்கு ஒலிபெருக்கி விளம்பரம் மூலம் கிராம மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் படி கூடிய அவசர கிராம கூட்டத்தில் நெடுவாசல் கிராமத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கிராமத்தின் கோரிக்கையை ஏற்று கடையை நிரந்தரமாக மூடிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி கூறிக்கொள்வதுடன் இனிமேல் நெடுவாசல் கிராம எல்லைக்குள் எந்த இடத்திலும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யக் கூடாது மீறி மது விற்பனை செய்யப்பட்டால் கிராமத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டதால் கடையில் இருப்பு இருந்த மது வகைகள் மற்றும் தளவாடி பொருட்களை டாஸ்மாக் ஊழியர்கள் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்திருப்பதாக கூறினார்கள்.