
திருவாரூர் மாவட்டத்தின் நகர் பகுதி, மன்னார்குடி மற்றும் கூத்தாநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று (27.03.2025) நில அதிர்வுடன் பயங்கர சத்தம் உணரப்பட்டதாகப் பொதுமக்கள் அச்சமடைந்தனர். அதே சமயம் வீட்டுக்குள் இருந்த மேஜைகள், நாற்காலிகள், கடையில் இருந்த பொருட்கள் அதிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். அதோடு பயங்கர சத்தம் காரணமாக ஏற்பட்ட அதிர்வு காரணமாகப் பொதுமக்கள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறினர்.
இந்நிலையில் இந்த பயங்கர சத்தத்திற்கான காரணம் குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்திய விமானப்படை வீரர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 04.30 மணி வரை ஜெட் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது ஜெட் விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்பட்டதால் 2 முறை பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது. எனவே திருவாரூரில் நில அதிர்வு ஏதுவும் ஏற்படவில்லை. ஆகையால் இது குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.