நாகை நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் தாழை.மு.சரவணன், திருவாரூர் மாவட்டம், தாழைக்குடியைச் சேர்ந்தவர். இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் சக்திவேல் என்கின்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் திமுக முன்னாள் எம்.பி தாழை.மு.கருணாநிதியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கொரடாச்சேரி ஒன்றிய அமைப்பாளராகவும் உள்ளார்.
"நாகப்பட்டினம் சிட்டிங் எம்பியான டாக்டர். கோபால், திருவாரூர் மாவட்ட அமைச்சரான காமராஜுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். அதனால் தான் கடந்த முறை யாரும் எதிர்பார்த்திடாத நிலையில் கோபாலுக்கு சீட் வாங்கிக்கொடுத்தார், அதேவேளையில் தற்போது உள்ள கள நிலவரப்படி எம்.பி கோபாலுக்கு உடல்நலம் சரியில்லாமல் அறுவைசிகிச்சை செய்துள்ளார் என்றும் தொகுதியில் சொற்ப அளவில்கூட நற்பெயர் இல்லை என்பதாலும், வாக்கு சிதறும் என்பதாலும், திமுக கூட்டணியில் கம்யூனிஸ்டுகளுக்கு வழங்கியிருப்பதால், திமுகவின் வாக்குகள் சிதறும், அதை கைப்பற்றிடவுமே சரவணனை வேட்பாளராக தேர்வு செய்துள்ளார் அமைச்சர் காமராஜ். அதேவேளையில் நாகை, திருவாரூர், மாவட்டத்தில் அதிமுகவில் எத்தனையோ மூத்த, அனுபவமுள்ள மக்கள் செல்வாக்குடன் உள்ள கட்சிக்காரர்கள் இருந்தும் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு புதியவரான சரவணனுக்கு கொடுத்திருப்பது வறுத்தமாக இருக்கிறது" என்கிறார்கள் அதிமுகவினர்.