தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்திற்கு இன்று 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தொடர் மழை காரணமாக வீடுகள் இடிந்ததில் இடிப்பாடுகளில் சிக்கி நான்கு பெண்கள், சிறுமி உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 9 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மூன்று பேரை மீட்கும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே கோவை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.