கோவையில் சிறுமி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளியை, பத்திரிகையாளர்களின் கண்களில் இருந்து மறைத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் மகிளா நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள சிறுமி பாலியல் கொலை வழக்கில் கிட்டத்தட்ட ஆறு நாட்களுக்குப் பிறகு, நடத்தப்பட்ட விசாரணையில் சந்தோஷ் குமார் குற்றவாளி என தெரியவந்துள்ளது. மேலும், சந்தோஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சிறையில் அடைக்க துடியலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கோவை மாவட்ட அரசு மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்த இருந்தனர். இதற்காக நேற்று (ஞாயிறு) மதியம் முதல் இரவு 11.45 மணி வரை பத்திரிகையாளர்கள் பந்தய சாலை அருகே உள்ள நீதிபதி குடியிருப்பு முன்பு செய்தி சேகரிக்க காத்திருந்தனர்.
அதேபோல, இன்னும் சில பத்திரிகையாளர்கள் கோவை அரசு மருத்துவமனையிலேயும் காத்திருந்தனர். ஆனால், குற்றவாளி சந்தோஷ் குமாரை கடைசிவரை அழைத்து வரவில்லை. இதையடுத்து, செய்தியாளர்கள் அனைவரும் கலைந்தனர்.
இந்த நிலையில், போலீசார் திடீரென தனியார் காரில் மஃப்டி போலீஸார் உதவியுடன் குற்றவாளி சந்தோஷ் குமாரை கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு வார்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த அறிக்கையில் விவரங்களை பதிவு செய்து உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து, அவரை அதிகாலை சுமார் 4;30 மணியளவில் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஏப்ரல் 15-ம் தேதி வரை குற்றவாளிக்கு நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த குற்றவாளியை ஏன் இவ்வளவு மர்மமாக அழைத்துச் செல்ல வேண்டும். ஏன் பத்திரிகையாளர்கள் கண் முன்பு குற்றவாளியை காட்டவில்லை என்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.