தேனி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக - கேரள எல்லையில் மூன்று மருத்துவக் குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. கேரளா மாநிலத்தில் சமீபத்தில் பெய்த மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிலிருந்து மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்கள் இந்த நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் இருப்பதாக டாக்டர்கள் குழுவினர் மூலம் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்கு வேலைக்கு சென்று வருவதால் இங்கு எலிக்காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கம்பம்மெட்டு, போடிமெட்டு, லோயர் கேம்ப் ஆகிய மூன்று இடங்களில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கேரளாவில் இருந்து வரும் பேருந்து, கார், வேன் போன்ற வாகனங்களை நிறுத்தி பயணிகளை சோதனையிட்ட பின்பே தேனி மாட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். அதுபோல் போடிமெட்டு பகுதியில் உள்ள சோதனை சாவடிகளை தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், கூடலூர் வட்டார மருத்துவ அலுவலர் முருகன் உள்ளிட்டோர் முகாமை பார்வையிட்டனர்.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..... ஸ்பைரோகிரீட் பாக்டீரியா மூலம் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு எலிக்காய்ச்சல் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடு, எலி, வாத்து, பன்றி, குதிரை போன்ற உயிரினங்களின் சிறுநீர் கலந்த தண்ணீர் மூலம் பிறருக்கு பரவுகிறது. உடலில் ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் கண், மூக்கு அல்லது வாய் வழியாக கிருமிகள் உடலில் புகுந்து இந்நோயை உண்டாக்கும். தண்ணீர் மாசுபடுவதால் பெரும்பாலும் இந்நோய் ஏற்படுகிறது. சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை இந்நோய்க்கிருமிகள் உயிர்வாழும்.
நோய் கிருமிகள் உடலில் நுழைந்தபின் 5 முதல் 15 நாட்களில் இதற்கான அறிகுறிகள் தெரியும். முதல் 7 முதல் 10 நாட்கள் வரை காய்ச்சல் இருக்கும். கண்களில் சிவப்பு, தலைவலி, குளிர், தசைவலி, உடல்வலி, வாந்தி, மஞ்சள்காமாலை, தோலில் தடிப்பு, வயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவையே இந்நோயின் அறிகுறிகள். குடிநீரில் குளோரின் கலத்தல், காய்ச்சி வடிகட்டிய குடிநீர் குடித்தல், காலணிகளை பயன்படுத்துதல், நீச்சல் குளங்களில் குளோரின் பயன்படுத்துதல், குடிநீர் குழாய்களை கசிவு இல்லாமல் பராமரித்தல், அசுத்தமான நீர் தேங்கியிருக்கும் இடங்களில் நடப்பதை தவிர்த்தல், குடியிருப்புகளை சுற்றி சுத்தமாக வைத்திருத்தல், ஆடு, மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணையை சுண்ணாம்பு கலந்த பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
சுகாதாரமற்ற இடங்களில் பணிபுரிபவர்கள், துப்புரவு பணியாளர்கள், கால்நடை வளர்ப்பவர்கள், தேங்கிய நீர்நிலைகளில் நீர்பிடிப்பவர்கள், விவசாயிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.