திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டது. இதனை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளதோடு, குழந்தைகளுக்கான தனிப்பிரிவு, போட்டித்தேர்வர்களுக்கு பிரத்தியேக பிரிவு, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒலி வடிவிலான ஸ்டுடியோ, சிறார்களுக்கான சிறிய திரையரங்கம் என ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் கலைஞர் அருகில் அமர்ந்து பேசுவது போன்ற திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த திரையின் அருகே அமர்ந்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கலைஞருடன் பேசுவது போன்று வடிவமைக்கப்பட்டது. மேலும் கலைஞர் ஏற்கனவே பேசிய உரையாடலைப் போட்டு அதற்கு துரைமுருகன் மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசுவது போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த திரை பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.