திருவண்ணாமலை வளர்ச்சிப் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, "தமிழகத்தில் போதிய மருத்துவக் கருவிகள் உள்ளன. அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது. குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வந்தவாசியில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. திருவண்ணாமலை கோயில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 31.24 கோடி செலவில் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,000- க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம். கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான். குறுகிய காலத்தில் எப்படி அதிகம் பேர் பயனடைய முடியும் என்ற சந்தேகத்தால்தான் முறைகேடு கண்டுபிடிக்க முடிந்தது. விவசாயிகள் தாமாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதால்தான் முறைகேடு ஏற்பட்டது. கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். கிசான் முறைகேடு தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி -க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலத்துக்காக மட்டும் 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக கூறுவது தவறு; மற்ற மாவட்டங்கள் வழியாகவும் இந்தச் சாலை செல்கிறது. 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம்; உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழகத்தில் கொலைகள் மறைக்கப்பட்டதாக ஸ்டாலின் உண்மைக்கு மாறான தகவலைக் கூறுகிறார்". இவ்வாறு முதல்வர் கூறினார்