தமிழ்நாட்டில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் பெரிய அளவில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அதன் வீச்சு படிப்படியாகக் குறைந்துவருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 600 முதல் 700 வரை என்ற அளவில் இருந்துவருகிறது. இந்த அளவும் விரைவாக குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, தடுப்பூசியைப் போர்க்கால அடிப்படையில் செலுத்தும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகக் தெரிவித்துள்ளது. அதன்படி வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி அதிக எண்ணிக்கையிலான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் புதிய திருப்பமாக தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கரோனா வைரஸ் தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பரவியுள்ள இந்த தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கிட்டத்தட்ட 38 பேருக்கு இந்த தொற்று இதுவரை உறுதியாகியுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திரா வரைக்கும் இந்த தொற்று பரவியுள்ளது. குறிப்பாக, கர்நாடகாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு எடுத்துவருவதாக தெரிவித்துள்ள நிலையில், இன்று (13.12.2021) முதலமைச்சர் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. இந்த தொற்று காரணமாக சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான வாய்ப்புகள் குறித்து பேசப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.