தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28/09/2021) ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
கூட்டத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை எப்போது திறப்பது; வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்குவது; கரோனா தடுப்பூசி போடும் பணிகள், கரோனா தடுப்புப் பணிகள் உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், சில தளர்வுகளை அளிப்பது குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கூடுதல் தளர்வுகள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.