Skip to main content

பேருந்து படியில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கம்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
City Transport Corporation Explanation What measures have been taken to prevent traveling on bus steps? -

பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வரும் காட்சிகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. சமீபத்தில், சென்னை குன்றத்தூர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் பேருந்து படியில் பயணம் செய்தபோது யாரும் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து தனது இரண்டு கால்களை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இந்த நிலையில், பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டில் பயணிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மாநகர பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதுகாப்பாக உட்புறம் வருமாறும், படிக்கட்டு பயணத்தை அறவே தவிர்க்குமாறும் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரால் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பார்வையாளர்கள், வருவாய்ப்பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோரும் இந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.

பள்ளிகளுக்கு நேரில் சென்று படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் ஆபத்து, உயிரிழப்பு போன்ற கடுமையான விளைவுகளை எடுத்துரைத்து, ஆபத்தான பயணத்தை தவிர்த்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும் என மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் காவல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவ்வப்போது ஆசிரியர்களும் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆபத்தான முறையில் பயணம் செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து, பெற்றோர் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்பந்தப்பட்ட கல்வி நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு கடிதம் அனுப்பப்படுகிறது. காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதோடு பள்ளி, கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் கோரும் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்