நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் மூலம் நகராட்சி பேரூராட்சிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வெற்றி பெற்று பதவியில் அமர்ந்த தி.மு.க.வினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்ததால், தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர பொறுப்பாளர் முரளி, போடி நகர பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி கட்சியின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் உத்தரவிட்டிருக்கிறார்.
தேனி நகராட்சி 20- வது வார்டில் நகர பொறுப்பாளர் பாலமுருகனும், அவரது மனைவி ரேணுபிரியா 10- வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதன்மூலம் பாலமுருகனின் மனைவி ரேணுப்பிரியா நகர்மன்ற தலைவர் பதவிக்கு வர இருந்தார். ஆனால் நகராட்சி தலைவர் பதவியை திடீரென காங்கிரஸுக்கு ஒதுக்கிய நிலையில் ரேணுப் பிரியா நகராட்சி தலைவரானார். அதுபோல் பெரியகுளம் நகராட்சி துணைத்தலைவர் பதவி விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 26- வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ராஜா முகமது துணைத் தலைவரானார்.
போடி நகராட்சி துணைத் தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 25- வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கிருஷ்ணவேணி துணைத் தலைவரானார். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் உடனடியாக தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
எனினும், சில தி.மு.க.வினர் கடந்த 12 நாட்களாக பதவியை ராஜினாமா செய்யாமல் இழுத்தடித்து வந்தனர். அதைத் தொடர்ந்து, கட்சி உத்தரவை மீறியதாக தி.மு.க. நகர பொறுப்பாளர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைவரும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இது சம்பந்தமாக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறும் போது, "முதலமைச்சர் உத்தரவு மதிக்காமல் மெத்தன போக்காக செயல்பட்டு வந்ததால், முதல் கட்டமாக தேனி, போடி, பெரியகுளம் ஆகிய மூன்று நகர பொறுப்பாளர்களை கட்சி உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.