





மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோரை தனித்தனியாகச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, டெல்லியில் அரசு மாதிரி பள்ளிகளையும், மொஹல்லா கிளினிக்கையும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து பார்வையிட்டார்.
பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (02/04/2022) அதிகாலை டெல்லியில் உள்ள நேரு பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மற்றும் டெல்லி வாழ் தமிழர்கள் முதலமைச்சரை ஆர்வமுடன் சந்தித்து தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அத்துடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.