பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116வது பிறந்த நாள் விழா மற்றும் 61வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2023) நடைபெற்று வருகிறது. இதனையொட்டி மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் மதுரை, தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 190 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டும் பணி மற்றும் மதுரை தொண்டி சாலையில் அப்பல்லோ சந்திப்பில் 150 கோடியே 28 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம் மற்றும் வட்ட வடிவ சந்திப்பு அமைக்கும் கட்டுமான பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்ற முதல்வர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார். அப்போது முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மதுரை திரும்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரையில், உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பழ. நெடுமாறன் குடும்பத்தினர் உடனிருந்தனர்.
இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “மதுரைக்குச் சென்றிருந்தபோது, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் உடல் நலிவுற்றிருக்கும் செய்தியறிந்து, அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தேன். பொடாவில் கைது செய்யப்பட்டு அவர் கடலூர் சிறைச்சாலையில் இருந்தபோது, நான் வேறொரு போராட்ட வழக்கில் அதே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். அப்போது ஒரே பிளாக்கில் இருந்த நாங்கள் பல்வேறு உரையாடல்களில் ஈடுபட்டதை நினைவுகூர்ந்து பகிர்ந்துகொண்டோம். அய்யா பழ. நெடுமாறன் விரைந்து நலம் பெற விழைகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.