Skip to main content

முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Chief Minister M. K. Stalin's program postponement!

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

இந்த சூழலில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (01.12.2023) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கில் சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 940 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

 

இது தொடர்ந்து மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை (02.12.2023) ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். பின்னர் 3 ஆம் தேதி புயலாக வலுப்பெறக்கூடும். பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

Chief Minister M. K. Stalin's program postponement!

 

அதே சமயம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டம், ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

 

Chief Minister M. K. Stalin's program postponement!

 

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை (02.12.2023) நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா, விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

 

தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை சென்னையில் புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2 ஆம் தேதி முதலமைச்சரின் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்