
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியுள்ள 120 மாவட்டங்களைச் சேர்ந்த 2,150 தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
இப்பொதுக்குழு கூட்டம் சரியாக இன்று காலை 10 மணி அளவில் துவங்க இருக்கிறது. பொதுமக்களுக்கு போக்குவரத்து நெரிசல் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக காலையிலேயே நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட மண்டபத்திற்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருமொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழல் முறைகேடு உட்பட தமிழகத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகள் குறித்து 15 தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் வந்திருக்கக்கூடிய மாவட்ட நிர்வாகிகளை உபசரிக்கும் வகையில் 2,500 பேருக்கு சுட சுட மதிய விருந்தும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்தை வருங்கால முதலமைச்சர் எனக் குறிப்பிட்டு சென்னையில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈசிஆர் சரவணன் பெயரில் இப்படி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பரபரப்பு போஸ்டர் குறித்து புஸ்ஸி ஆனந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சில விஷமிகள் வேண்டும் என்று செய்திருக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருடைய கோடான கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்த தொண்டர்களில் நான் ஒரு ஆள். இதுபோன்ற ஐந்து போஸ்டர்களை யாராவது ஓட்டுகிறார்கள் என்றால் அதை நீங்கள் பெரிய விஷயமாக பெரிது படுத்துவதால் தான் இப்படி நடக்கிறது. இதுபோன்று செய்ய வேண்டாம். புகார் கொடுக்க சொல்லப்பட்டிருக்கிறது'' என்றார்.