
பாடையில் மருத்துவ உபகரணங்களைத் தூக்கிச்சென்ற நூதனப் போராட்டம் சிதம்பரத்தில் நடந்தது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கடந்த 35 நாட்களாக மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தைப் போலவே தங்களுக்கும் கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், அவர்களின் போராட்டம் நோயாளிகளுக்கும் பொதுமக்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் (உணவு இடைவேளை மற்றும் கல்லூரி நேரம் முடிந்து) தொடர்ந்து நடத்திவருகின்றனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும் பல்கலைக்கழக நிர்வாகமும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், 34வது நாள் போராட்டத்தில் கல்லூரி வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட அனைத்து மாணவர்களும் ஒன்றுகூடி பாடைகட்டி, அதில் மருத்துவரின் உடை மற்றும் ஸ்டெத்தஸ்கோப் உள்ளிட்ட உபகரணங்களை வைத்து கல்லூரி வளாகத்தில் பேரணியாகச் சென்றனர்.
மாணவர்கள், நிர்வாக அலுவலகத்திற்கு அருகே சென்று தமிழக அரசு மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கவும், அரசு கல்லூரியில் அரசு கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், அரசு கல்லூரியில் அரசே கொள்ளை அடிக்கலாமா என்ற கோஷங்களை எழுப்பினார்கள்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் தூக்கிச் சென்ற பாடையை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தின் வாயிலில் வைத்துவிட்டு மறுபடியும் கல்லூரியை அடைந்தனர். மாணவர்களின் தொடர் போராட்டம் இடைவிடாது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், தமிழக அரசு இதுவரை இதுகுறித்து வாய்ப் பேச மறுத்துள்ள நிலையில் மாணவர்களின் போராட்டம் தொடர் மழையிலும் தொடர்ந்து நடந்து வருகிறது.