Skip to main content

டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்; நகர்மன்ற தலைவர் மழுப்பல்

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

chidambaram municipality meeting councillor request 

 

சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றக் கூட்டம் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்திற்கு நகராட்சி துணைத்தலைவர் முத்துகுமரன், ஆணையர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் பேசியது, "நகர்மன்றம் பொறுப்பேற்று ஓராண்டாகிறது. ஓராண்டில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிதம்பரம் நகராட்சியில் புதிய காய்கறி அங்காடி, புதிய பேருந்து நிலையம், புதிய நூலகக் கட்டிடம், 2 கோடி ரூபாய் செலவில் அறிவுசார் மையம், நவீன மின் மயானம், பூங்காக்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மேலும் 143 கோடியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் புதிய குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு தூய குடிநீர் வழங்கும் திட்டம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவையல்லாமல் சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி குடிநீர் தேக்கம் சீரமைக்கப்படுகிறது. நகரம் முழுவதும் 3 கோடி ரூபாய் செலவில் எல்.இ.டி மின்விளக்குகள் பொருத்தப்படவுள்ளது. நகரில் உள்ள அனைத்து குளங்களையும் தூர்வாரி கரைகளை சீரமைத்து நடைபாதை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையல்லாமல் நகராட்சி சார்பில் வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது" என்றார்.

 

அதேபோல் நகர்மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன் பேசுகையில், "நகராட்சி பகுதியில் குடியிருந்த 300க்கும் மேற்பட்டவர்களின் வீடுகள் ஆக்கிரமிப்பு வீடுகள் என இடிக்கப்பட்டது. அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும், மின் விளக்கு, குடிநீர் மக்களுக்கு தங்கு தடையின்றி வழங்க வேண்டும்” என்று பேசினார். நகர்மன்ற உறுப்பினர் தாரணி அசோக் பேசுகையில், "கடந்த ஒரு வருடமாக பேருந்து நிலையத்தில் அனைவருக்கும் இடையூறு ஏற்படுத்தி வரும் ஒரே இடத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இதனால் பள்ளி செல்லும் மாணவிகள், பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் டாஸ்மாக் கடை அருகே நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது எனவே இதனை மாற்ற வேண்டும்" எனப் பேசினார். இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் மழுப்பலாகப் பதில் கூறினார்.

 

மன்ற உறுப்பினர் கல்பனா சண்முகசுந்தரம் பேசுகையில், "ஒரு ஆண்டில் இவ்வளவு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஏன் சிதம்பரம் நகராட்சி வெப்சைட்டில் பதிவு செய்யவில்லை. பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். "இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்" என  நகர்மன்றத் தலைவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்