நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சேலம் இடையிலான பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், விவசாயிகள், நில உரிமையாளர்கள் என பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலங்களை அழித்தே பெரும்பாலான சாலைகளை செயல்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
நீதிபதிகள் குறுக்கிட்டு, நாடு முழுவதும் சாலைகள் அமைத்துவிட்டு உணவிற்கு என்ன செய்ய போகிறீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும், இதே நிலை தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் சாப்பிட கற்களும், மணல்களும் மட்டுமே மிஞ்சும் என வேதனை தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன், விவசாய நிலங்கள், ஏரிகள் போன்றவை மனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டு வருகிறது. இதை யாரும் எதிர்க்கவில்லை என தெரிவித்தார்.இதனையடுத்து வழக்கின் விசாரணையை நாளை மதியத்திற்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.