சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கான மத்திய அரசிதழ் அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 வழி சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசின் மே 23ஆம் தேதியிட்ட அரசிதழில் 1900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, திட்டத்துக்கு தேவையான 1900 ஹெக்டேரில் 1500 ஹெக்டேர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், மீதமுள்ள 400 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
மத்திய அரசிதழுக்கும், மாநில அரசின் தகவலுக்கும் வேறுபாடு உள்ளதாலும், இயற்கை வளங்கள், நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான மத்திய அரசிதழை ரத்து செய்யக்கோரி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ் குமார் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ட்டி.எஸ்.சிவஞானம், என்.சேஷசாயி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது "மனுதாரர் தரப்பில் ஏற்கனவே கிருஷ்ணகிரி வழியாகவும், உளுந்தூர்ப்பேட்டை வழியாகவும் சேலத்தை அடைவதற்கான சாலை வசதிகள் உள்ளதாகவும், தற்போது விமான சேவையும் துவக்கப்பட்டுள்ள நிலையில் 8 வழி சாலை திட்டம் தேவையில்லாதது என்றும், தமிழக அரசின் இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் மிக பெரிய அளவில் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளாமல் திட்டம் செயல்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். திட்டத்திற்கு ஆட்சோபம் தெரிவிப்பவர்கள் மிரட்டப் படுவதாகவும், இந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி வீணடிக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கு குறித்து, மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே தொடரப்பட்ட வழக்குகளுடன் ஜூலை 12ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.