சென்னை பிராட்வே முதல் கேளம்பாக்கம் சிறுசேரி வரை செல்லக்கூடிய 102 ஆம் எண் கொண்ட சென்னை மாநகர அரசு பேருந்து ஒன்று அடையாறு எல்பி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென நடுவழியிலேயே இந்த பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் பேருந்தின் மற்ற பகுதிகளில் மளமளவென தீப்பிடித்து. இதனால் பேருந்து முழுவதும் எரிய தொடங்கியது.
இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை சுமார் அரை மணி நேரம் போராடி அணைந்தனர். முன்னதாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் உடனடியாக பேருந்தை விட்டு பாதுகாப்பாக இறங்கி விட்டனர். இதனால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சாலையில் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பேருந்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.