உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,035 ஆக அதிகரித்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் கரோனாவுக்கு நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று (19/03/2020) நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "வரும் 22- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணிவரை பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். மேலும் 22- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு இல்லத்தின் வாயிலில் நின்று அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோருக்கு மற்றவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்று மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுய ஊரடங்கைக் கடைப்பிடிக்கப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதால், சென்னை கோயம்பேடு மார்க்கெட் நாளை மறுநாள் (22/03/2020) செயல்படாது என அனைத்து வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட் சென்னை கோயம்பேடு மார்க்கெட் ஆகும்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளையும் மார்ச் 31- ஆம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.