சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலும் அண்மையில் சொற்பொழிவு நடத்தப்பட்டது. தன்னம்பிக்கை குறித்த பேச்சு என்ற அடிப்படையில் சொற்பொழிவை நடத்த மகாவிஷ்ணு என்பவர் அழைத்துவரப்பட்டார். 'தன்னை உணர்ந்த தருணங்கள்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றும்போது முழுக்க முழுக்க ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
உங்களுக்கு யோக தீட்சை தருகிறேன் என்று தெரிவித்ததோடு மறுபிறவி குறித்தும் மாணவர்கள் மத்தியில் பேசியிருந்தார். கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது எனவும் பேசினார். மறுபிறவி குறித்துப் பேசுவது; ஆன்மீகம் குறித்துப் பேசுவது பள்ளி மாணவர்களுக்கு மூடநம்பிக்கை ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டு எதிர்ப்புகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பான புகார் பள்ளிக்கல்வித் துறையினுடைய உயரதிகாரிகளுக்குச் சென்ற நிலையில், தமிழக அரசினுடைய கவனத்திற்கும் சென்றது.
இதனையடுத்து அசோக் நகர் பள்ளிக்குத் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வந்திருந்தார். அப்போது அவர், ''இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாத அளவிற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் யாராக இருந்தாலும் சரி இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நாங்கள் எடுக்கப்படும் நடவடிக்கை தமிழகம் முழுமைக்குமான ஒட்டுமொத்த பாடமாக இருக்கும்' எனத் தெரிவித்திருந்தார். மேலும் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரம் செய்ததையும், சனாதன, ஆபாச கருத்துக்களைப் பேசி மூடநம்பிக்கைகளை விதைப்பதோடு, மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததைக் கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு கண்டன போராட்டம் நடத்தினர்.
அதே சமயம் காவல் நிலையத்திலும் மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் மகாவிஷ்ணு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கடந்த 7ஆம் தேதி (07.09.2024) போலீசார் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவலில் மகாவிஷ்ணு வைக்கப்பட்டார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.