திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
'நிவர்' புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,000 கனஅடிக்கு அதிகமாக நீர் வந்துக் கொண்டிருக்கிறது.
24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக இன்று நண்பகல் 12.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று உதவிப்பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், சூழ்நிலையைப் பொறுத்து நீர் திறப்பு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 19 மதகுகள் உள்ள நிலையில் 7 மதகுகளில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் வாய்க்கால் வழியாக அடையாற்றில் கலந்து கடலுக்கு செல்கிறது.
தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. 2015- ஆம் ஆண்டு பெரு வெள்ளத்தின்போது, செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்ட நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஏரி திறக்கப்பட்டுள்ளது என்பது நினைவுக்கூறத்தக்கது.