Skip to main content

கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணையிக்கக் கோரிய ஜவாஹிருல்லா மனு தள்ளுபடி!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

high court chennai


கரோனா சிகிச்சைக்கு கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரியும், தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கக் கோரியும் த.மு.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
 


இதுதொடர்பாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா தொடர்ந்துள்ள பொது நல வழக்கில், தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கு 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் அதிக கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகளைக் குறிப்பிட்டிருந்தார். 

மேலும், டில்லி, குர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் 12 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  கரோனாவுக்கு தனியா சிகிச்சை இல்லை என்பதால், வழக்கமான வைரஸ் காய்ச்சல்களுக்கு வழங்கப்படும் சிகிச்சையே வழங்கப்படுகின்றன. அனைத்து தரப்பினருக்கும் சிகிச்சை வழங்க வேண்டிய கடமை தனியார் மருத்துவமனைகளுக்கு உள்ளன.  பொருளாதார ரீதியில் நலிந்த பிரிவினரிடம் அதிக கட்டணம் வசூலிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

கரோனாவால் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மருத்துவமனைகளால் மட்டும் நிலைமையை சரி செய்து விட முடியாது என்பதால் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பு அசியமானது. வர்த்தகச் சுரண்டலைத் தடுக்க, கட்டண விகிதம் உள்ளிட்ட ஒழுங்குமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.  
 

 


தனியார் மருத்துவமனைகளை சிகிச்சை அளிக்க அனுமதித்த அரசு, கட்டணம் நிர்ணயிக்கத் தவறிவிட்டதால், தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிக்கிறது.  சாதாரண மக்களால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியவில்லை. மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதால் காப்பீடு கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. 

எனவே,  தனியார் மருத்துவமனைகளில் 50 சதவீத படுக்கைகளை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்கும்படி மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த உத்தரவிட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.  குறிப்பாக,  கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். 

ஜவாஹிருல்லாவின் இந்த மனு,  தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றத்திலும் இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கவில்லை எனக் குறிப்பிட்டு எந்த அரசாணையை எதிர்த்தும் வழக்கு தொடரப்படவில்லை என்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 

http://onelink.to/nknapp


அப்போது மனுதாரர் தரப்பில்,  உச்ச நீதிமன்றத்தில் தொடரபட்ட வழக்கு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்டது என்றும், தங்களது மனு மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கபட்டது.

பொதுப்படையான குற்றச்சாட்டுகள் குறித்து நீதிமன்றம் விசாரணை நடத்த முடியாது. சரியான தகவலை மனுதாரர் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதோடு, அடிப்படை உரிமைகள் மீறல் குறித்து தெரிவிக்கவில்லை என்பதால் வழக்கை ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்