தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கே 160 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் தெற்கு ஆந்திரா, வட தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வட தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. வட தமிழகம், புதுவை பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 40 முதல் 55 கிமீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.