கடலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட வருவாய் வட்டங்களை இணைத்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி விருத்தாசலம் பகுதியில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய கட்சி சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் தமிழ்நேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முல்லைநாதன் முன்னிலை வகித்தார். இதில் 60க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, விருத்தாசலத்தில் தலைமையிடமாக அறிவிக்கக் கோரியும், விருத்தாசலம் கோட்டத்திலிருந்து எந்த பகுதியையும் பிரிக்கவோ, கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கவோ கூடாதென வலியுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப்பினர்.
முன்னதாக அவர்கள் வருவதை அறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருத்தாசலம் போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்களை கைது செய்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60-க்கும் மேற்பட்ட அக்கட்சியினரை விருத்தாசலம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்பு நேற்று மாலை 6 மணியளவில் அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.