கடலூர் மத்திய சிறையில், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் ஃபோனை சிறைக்காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
கடலூர் கேப்பர் மலையில், மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு சிறைக் காவலர்கள் நேற்று முன்தினம் கைதிகளின் அறைகள் மற்றும் சிறை வளாகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தொகுதி 2-ல், மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் ஃபோனை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதையடுத்து சிறை அலுவலர் அப்துல்ரகுமான் அளித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த மொபைல் ஃபோன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கடலூர் மத்திய சிறையில் கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த திடீர்குப்பத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரது மகன் சிவா, சோழத்தரம் போலீசாரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் விசாரணை கைதியாகச் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவர் நேற்று இரவு 7.30 மணி அளவில், தோல் வியாதிக்குப் பயன்படுத்தப்படும் மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு உடனடியாகச் சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்தும் கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
கடலூர் மத்திய சிறைச் சாலையில், செல்ஃபோன் பதுக்கி வைத்திருந்தது மற்றும் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்தது என இருவேறு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.