காவிரிப்படுகையில் மீத்தேன் ஆய்வுத் திட்டத்தை ஓஎன்ஜிசி நிறுத்திக்கொண்டது, திட்டமிட்ட காலம் முடிவதற்கு முன்பே, இத்திட்டம் சாத்தியமில்லை என்று கருதி ஓஎன்ஜிசி நிறுத்தியிருப்பது தமிழக மக்களின், குறிப்பாகக் காவிரிப் படுகை மக்களின் எதிர்ப்புக்குக் கிடைத்த வெற்றியாகும். என்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன்.
இது குறித்து அவர்கூறுகையில், " 2013-இல் பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஓ.என்.ஜி.சி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு மூன்று ஆண்டுகள் கொண்ட மூன்று கட்டங்களாக, ஷேல் ஆய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிமம் வழங்கியிருந்தது. இதில் முதல் கட்டமாக ஓ.என்.ஜி.சி ஐம்பது பிளாக்குகளிலும், ஆயில் இந்தியா லிமிடெட் ஒவ்வொரு கட்டத்திற்கும் ஐந்து பிளாக்குகள் வீதம் ஷேல் எண்ணெய், எரிவாயுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
முதற்கட்டத்தில் காவிரிப்படுகையில் 9 பிளாக்குகளை ஷேல் எண்ணெய் எரிவாயு எடுப்பதற்காக அமைக்க ஓ.என்.ஜி.சி அனுமதி பெற்றது. ஆனால் மக்களைத் திரட்டி நடத்தப்பட்ட போராட்டங்கள் காரணமாக, ஓ.என்.ஜி.சி யால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியவில்லை. தமிழக அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களின் வேண்டுகோளை ஏற்று, தம்முடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புத் திட்டம் இடம்பெற்றது. கிருஷ்ணா -கோதாவரி, அஸ்ஸாம், காம்பே ஆகிய பகுதிகளில் 26 கிணறுகளை அமைத்தது ஓ.என்.ஜி.சி. ஆனால், காவிரிப்படுகையில் ஒரு கிணறை கூட அமைக்க முடியவில்லை. திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பும், நிலவியல் காரணமும், மக்கள் எதிர்ப்பால் உருவான அரசியல் தலைமைகளின் எதிர்ப்பும் இத்திட்டத்தைக் கைவிடக் காரணம் எனலாம்.
நிலவியல் காரணமாகவும், அரசியல் எதிர்ப்பு காரணமாகவும் கிணறுகளை அமைக்க முடியவில்லை என்று ஓ.என்.ஜி.சி காரணம் கூறியுள்ளது. ஆனால் சர்வதேச நிறுவனத்துடன் இணைந்து எரிவாயு இருக்கும் அளவை இந்திய அரசு மதிப்பீடு செய்ய உள்ளதாகத் தெரியவருகிறது.
எப்போதும் மக்கள் போராட்டம் வெல்லும். மக்கள் தொடர்ந்து களத்தில் நிற்பதன் மூலம் தங்கள் மண்ணையும், நிலத்தையும், நீரையும் சுற்றுச்சூழலையும் நிச்சயமாகப் பாதுகாக்க முடியும்". என்கிறார் அவர்.