Skip to main content

பள்ளி மாணவிகள் மீது சாதிப்பெயரைச் சொல்லித் தாக்குதல்; தட்டிக் கேட்ட அண்ணனுக்கு கொலைமிரட்டல்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Caste-based attacks and  threats; Hospitalization of female students

 

பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவிகள் மீது சாதிப் பெயரைச் சொல்லி திட்டி தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் திருக்கனாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பன். இவருக்கு இரு மகள்கள். இருவரும் மூரார்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கின்றனர். மூத்த மகள் 12ம் வகுப்பும், இளைய மகள் 10ம் வகுப்பும் படித்து வருகின்றனர். மூரார்பாளையத்தில் படிக்கும் மாணவர்கள் திருக்கனாங்கூர் கிராமத்தில் இருந்து ஆலந்தூர் கிராமம் வந்து அங்கிருந்து பேருந்துகளில் மூரார்பாளையம் செல்வது வழக்கம். 

 

தாக்கப்பட்ட மாணவிகள் சம்பவத்தன்று பள்ளி முடிந்து மூரார்பாளையத்தில் இருந்து ஆலந்தூரில் இறங்கி அவர்களது கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது, ஆலந்தூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் என்பவர் தகாத வார்த்தைகளால் மூத்த பெண்ணை திட்டியுள்ளார். மாணவிகள் ஏன் திட்டுகிறீர்கள் எனக் கேட்க கோபமடைந்த அய்யனார் சாதிப் பெயரைக் கூறி அவர்களைத் தாக்கியுள்ளார். அருகில் இருந்த மற்றொரு இளைஞரும் (17 வயது) அவர்களைத் தாக்கியுள்ளார். 

 

இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாணவிகளின் அண்ணன் கருணாகரனுக்கு ஆலந்தூர் நீலகண்டன் என்பவர் கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து கள்ளக்குறிச்சி காவல்நிலையத்தில் மாணவிகள் புகாரளிக்க, காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட அய்யனார், நீலகண்டன் ஆகியோரை கைது செய்தனர். 17 வயது இளைஞர் இளஞ்சிறார் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார். தாக்குதலில் காயமடைந்த மாணவிகள் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்