Skip to main content

சீமான் மீது வழக்குப் பதிவு!

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Case filed against Seaman

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது வைரலானது. அவர் பேசியது, "பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்றிருந்தார்.

 

இது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் திடீரென்று, "இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையை விட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்... இந்தப் பொறுமையை, தவறாகப் புரிந்து கொண்டு, கண்ட கழிசடைகளும் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்" எனத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

 

ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தை பற்றிப் பேசிவிட்டதாக நினைக்கிறார். ஆனால் என்னுடைய முழு பேச்சை கேட்டாரா எனத் தெரியவில்லை. சிறிய காணொளியை மட்டும் பார்த்துவிட்டு முடிவெடுக்கக் கூடாது. அவருக்கு என்னை திட்டுவதற்கோ, கோபப்படுவதற்கோ உரிமை இருக்கிறது" என்றார்.

 

இதையடுத்து நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரை குறிப்பிட்டுப் பேசினார். அவர் பேசுகையில், "மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவதே தவறு. மதம் மாற்றிக்கொள்ளக் கூடியது. ஆனால் மொழி மற்றும் இனம் மாற்றிக் கொள்ள முடியாது. நேற்று என் தம்பி யுவன் ஷங்கர் ராஜா யாரு? இன்றைக்கு யாரு... நேற்று என் அன்பு சகோதரர் ஏ.ஆர். ரஹ்மான் யாரு? திலீப். ஆனால் இன்றைக்கு அவர் ஏ.ஆர். ரஹ்மான். அதனால் நேற்று பெரும்பான்மை. இன்றைக்கு சிறுபான்மையா. இதெல்லாம் கேவலமாக இல்லையா. என்னுடைய இளையராஜா பெரும்பான்மை. யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை. இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கையாவது இருக்கா. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பது கிடையாது. என் கட்சியில் தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என எல்லாரும் இருக்கிறார்கள்" என்றார்.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து கடந்த ஜூலை 30 ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியதாகக் கூறி, திராவிட நட்புக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் போலிசில் புகார் அளித்தனர். இதையடுத்து சீமான் மீது 4 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்