நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது புகார்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதேநேரம் ஆவடி காவல் ஆணையகரத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் காவல் நிலையத்தில் அஜய் என்பவர் புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார்.
அந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என புகார் கொடுத்த அஜய் எஸ்சி/எஸ்டி ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரின் மீது விசாரணை நடத்திய எஸ்சி/எஸ்டி ஆணையம் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் ஆவடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பட்டாபிராம் போலீசார் காவல் நிலைய போலீஸ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தற்போது பட்டாபிராம் போலீசார் சீமான் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டு குறிப்பிட்ட வார்த்தை பயன்படுத்தியதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பட்டாபிராம் போலீசார் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.