
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்துள்ள மேல்வடுகுட்டை பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியம். இவர் குடும்பத்துடன் தொண்டான்துளசி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தொண்டான்துளசி சாலை பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக நடுசாலையில் வைக்கோல் காய வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த சாலை வழியாக சென்ற காரின் முன் பக்கத்தில் வைக்கோல்கள் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
வைக்கோலை கடந்து சென்ற சிறிது தூரத்திலேயே காரின் முன் பகுதியில் இருந்து புகை வெளியானது. ஆரோக்கியம் உள்ளிட்ட காரில் பயணித்த அனைவரும் உடனடியாக காரை விட்டு இறங்கிய நிலையில் கார் முழுவதுமாக தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காட்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.
சாலையில் காய வைக்கப்பட்டிருந்த வைக்கோல்தான் கார் தீப்பிடித்தது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரோக்கியத்தின் குடும்பத்தார் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.