
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நாயக்கனேரி ஊராட்சி. இந்த மலைக்கிராமத்தில் 3440 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஊராட்சியின் மன்ற தலைவர் பதவி பட்டியலின பெண்ணுக்கு என இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு வெளிவந்தது முதல் அதனை மாற்ற வேண்டும், தங்கள் கிராமத்தில் சில குடும்பங்கள் மட்டுமே பட்டியலினம் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இந்நிலையில் அந்த ஊராட்சியிலுள்ள 9 வார்டுகளில் ஒருவர்கூட போட்டியிடாமல் தேர்தலைப் புறக்கணித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் இந்துமதி, திமுக சார்பில் விஜயலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளராக முனியம்மாள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். இதற்குக் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 3 வேட்பாளர்களும் வேட்பு மனுக்களை திரும்பப்பெற்றனர்.

இந்நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பெண் வேட்பாளர் இந்துமதிக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 9 ஆம் தேதி மாதனூர் ஒன்றியத்தில் நடைபெற்றது. காமனூர்தட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு மையத்தில் தனது கணவர் பாண்டியனுடன் வந்து தனது வாக்கினைச் செலுத்தினார். பின்னர் போலீஸ் வேனில் பாதுகாப்புடன் வீடு திரும்பினார்.
இந்நிலையில் நாயக்கனேரி ஊராட்சி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின பெண் பதவியேற்கத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் தலைவர், முன்னாள் வார்டு உறுப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட கிராமத்தில் இல்லாத நிலையில், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது குறித்துத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதுவரை தலைவர் பதவியேற்பிற்குத் தடை விதித்தார். அடுத்த விசாரணை நவம்பர் 1 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.