17-வது மக்களவை தேர்தல் தேதிக்கான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் திரு. சுனில் அரோரா இ.ஆ.ப அவர்கள் நேற்று மாலை ( 10/03/2019) அறிவித்தார். இதில் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறும் எனவும் , தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும், இந்திய அளவில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைப்பெறும் எனவும் தேர்தல் தேதி ( 18/04/2019) என அறிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் (23/05/2019) எண்ணப்படும் என அறிவித்தார்.

மக்களவை தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி நடக்கும் அரசியல் கட்சிகள் வாக்களர்களுக்கு பணம் மற்றும் கிப்ட்பாக் (Giftpack) உள்ளிட்டவை கொடுத்தால் அரசியல் கட்சிகளின் மீது "மக்கள் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு" எளிமையான முறையில் புகார் அளிக்கும் வகையில் "மொபைல் ஆப்" (Mobile Application) வசதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது . இந்த செயலி என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுபாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலியை பயன்படுத்தி மக்கள் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் நபர்களின் ரகசியம் காக்கப்படும் என்பதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.
இந்த செயலியை மக்கள் எவ்வாறு பயன்படுத்துவது?
கூகுல் பிளே ஸ்டோரில் "c-VIGIL" என டைப் செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு தொலைபேசி எண்ணை பதிவிட வேண்டும். அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு குறுந்தகவல் வரும். இதில் ரகசிய குறியீட்டு எண் இடம்பெறும். இதை பதிவிட்ட பின் புகார் மனு அளிப்போர் பெயர் , தொலைபேசி எண் , முகவரி , தொகுதியின் பெயர் போன்றவை கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனை தொடர்ந்து "புகார் " சமந்தமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எவையேனும் இருந்தால் பதிவேற்றம் செய்து புகாரின் வகையை தேர்வு செய்த பின் விவரிக்க வேண்டும். எந்த பகுதியில் குற்றம் நடக்கிறது என்பதை புகார் மனுதாரர் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இதன் பிறகு "Acknowledgement No" புகார் அளித்த மனுதாரருக்கு வரும். புகார் மனு அளித்த 5 நிமிடத்தில் சமந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகள் புகார் மனுவில் குறிப்பிட்ட பகுதிக்கு செல்வர் . அவர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சமந்தப்பட்ட நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக புகார் மனு அளித்தவருக்கு குறுந்தகவல் அனுப்படும். மேலும் புகார் அளித்த மனுதாரருக்கு 100 நிமிடங்களுக்குள் எடுத்த நடவடிக்கை தொடர்பான முழு விவரத்தை அளிக்கும் வகையில் இந்த செயலி அறிமுகப்படுத்தியுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். மேலும் இந்த செயலியை (Log in) செய்த உடனேயே Mobile "GPS ON" ஆகும் வகையில் செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இளைஞரும் இந்த செயலியை அறிய வேண்டும். மேலும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் "என் வாக்கு விற்பனைக்கு அல்ல"."என் வாக்கு என் உரிமை" என உறுதிமொழியை ஏற்போம் ! ஜனநாயகத்தை காப்போம் !
பி . சந்தோஷ் , சேலம்