அதிமுகவுடன் கூட்டணி வைத்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. ஐந்து இடங்களில் போட்டியிட்டு ஒரு இடத்திலும் பாஜக வெற்றிப்பெறவில்லை. அதிமுக தங்களுக்கு துரோகமிழைத்து விட்டதாக பிரதமர் மோடியிடமும், பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவிடமும் தோல்விக்கான காரணங்களை அப்போதே பட்டியலிட்டனர். இதனால் அதிமுக தலைவர்கள் மீது அதிர்ப்தியடைந்தது அகில இந்திய பாஜக. இதனையடுத்து, டெல்லிக்குப் படையெடுத்த அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களை கெஞ்சிக் கூத்தாடி சமாதானப்படுத்தினர். இதனால் கடந்த 5 மாதங்களாக அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை தொடர்ந்தபடி இருக்கிறது.
தற்போது, நாங்குநேரிக்கும் விக்கிரவாண்டிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ' அதிமுக கூட்டணியில் நாங்குநேரியில் பாஜக போட்டியிட வேண்டும் ' என்றும், ' அதிமுக கூட்டணியை தவிர்த்து இடைத்தேர்தலை பாஜக தனித்து எதிர்கொள்ளவேண்டும் ' என்றும் தேசிய தலைமையை வலியுறுத்துகின்றனர் தமிழக பாஜகவினர். இந்த சூழலில், தேசியதலைவர் அமித்ஷா மற்றும் செயல் தலைவர் ஜே.பி.நட்டா இருவரிடமும் இடைத்தேர்தல் குறித்து மனு ஒன்றைத் தந்துள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா.
அந்த மனுவில், " நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து நாடார்களையும், வன்னியர்களையும் புறக்கணித்தே வருகின்றன.
பிரதமர் மோடியும், பாஜக தலைவராகிய நீங்களும் (அமித்ஷா) நாடார்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, BRICS அமைப்பின் ஆசியா பிராந்திய தலைவராக ஜெகதீச பாண்டியன், அப்துல் கலாம் அலங்கரித்த DRDO சேர்மன் பதவியில் கிறிஸ்டோஃபர் என இரு கிறிஸ்தவ நாடார்களை நியமித்து கவுரவப்படுத்தியிருக்கிறீர்கள்.
மதம் கடந்து திறமைக்கு கொடுத்த மரியாதை இது. ISRO சேர்மனாக சிவன் நாடார், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் ஆகிய இரண்டு இந்து நாடார்களுக்கு உயரிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், அதிமுக, 60 ஆண்டுகள் வரலாற்றில் முதல்முறையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாடார்களுக்கு மந்திரி பதவி கொடுக்காமல் புறக்கணித்துள்ளது. திமுகவோ,மாவட்ட செயலாளர், ராஜ்யசபை உறுப்பினர் உள்பட கட்சியின் அனைத்து நிலையிலுள்ள பதவிகளில் சகலவிதத்திலும் நாடார்களுக்கும் வன்னியர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை. செய்நன்றி மறவாத நாடார்களும் வன்னியர்களும் பாஜகவின் பின் அணித்திரள வைக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நாங்குநேரி இடைத்தேர்தலில், பாஜக சார்பில் நாடார் வேட்பாளரை நிறுத்துங்கள்.
அதிமுகவின் நடவடிக்கைகளால் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவை, நாங்குநேரி இடைத்தேர்தலில் நீங்கள் வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் சரி செய்து விடலாம். இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பிலுள்ள நாடார்கள், பாஜகவிற்கு பேராதரவு கொடுத்து, திமுக - அதிமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். அதுபோல், விக்கிரவாண்டியில் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ள A.G.சம்பத் போன்ற வன்னியர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துங்கள். திராவிட கட்சிகள் மீது அதிருப்தியிலுள்ள நாடார், வன்னியர், முத்திரையர்கள் உங்கள் பின்னால், தேன்கூட்டில் தேனீக்கள் கூடுவது போல் அணித்திரள்வார்கள்.
உண்மையான சமூகநீதி பாஜகவில்தான் இருக்கிறது எனும் நம்பிக்கையை பிற சமூக மக்கள் மனதில் முளைத்து, உங்களை பலப்படுத்தும். போலி திராவிட கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன். அதனால், இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட வேண்டும் " என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா புஷ்பா.