சென்னை அடையாறு பேருந்து பணிமனையில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு குணசேகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பணியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காரணத்தினால் கடந்த 10 நாட்களாக பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் நேற்று (20.11.2024) இரவு மது போதையில் பேருந்து பணிமனைக்கு வந்துள்ளார். முன்னதாக குணசேகரன் அடையாறு காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் பேருந்து பணிமனைக்குள் சென்று அங்கிருந்த மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்களிடமும் தகராறு செய்துள்ளார். அதன்பின்னர், அடையாற்றில் இருந்து மேற்கு தாம்பரம் செல்லும் பேருந்தை இன்று (21.11.2024) அதிகாலை வேளையில் அதிவேகமாக இயக்கி அருகே உள்ள காவல் நிலையத்தின் சுற்றுச்சுவர் மீது மோதினார். இதில் பேருந்தின் முன் பகுதி, காவல் நிலையத்தின் சுற்றுச்சுவர் மற்றும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்துக் கழகம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போதை தெளிந்தவுடன் குணசேகரன் மீது போலீசார் விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மது போதையில் இருந்த ஒருவர் பேருந்தை தவறுதலாக இயக்கி காவல் நிலைய சுற்றுச்சுவர் மீது மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.