Skip to main content

கட்டட அனுமதிக்கு லஞ்சம்; மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட இருவர் கைது

Published on 18/04/2023 | Edited on 19/04/2023

 

Bribery for building permission; Two persons including the interview assistant of the municipal corporation mayor arrested

 

கடலூர் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் இயங்கி வரும் நிலையில் கடந்த மாதம் இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேநேரத்தில் கடலூரில் 4 இடங்களில் அமைந்துள்ள கட்டடம் கட்டுவதற்கான வரைபடம் அனுமதி பெற்று தரும் தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. அப்போது ஓரிடத்தில் தனியார் நிறுவனம் மினி மாநகராட்சி அலுவலகம் போல் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

 

மாநகராட்சியில் உள்ள கோப்புகள் அனைத்தும் தனியார் நிறுவனத்தில் வைக்கப்பட்டு 20க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் அங்கு பணியாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு கட்டுமான நிறுவனங்களின் அனுமதிகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இன்று கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் கடலூர் குண்டுசாலை பகுதியை சேர்ந்த பரணி என்பவர் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் குண்டுசாலை பகுதியில், தான் புதிதாக கட்ட உள்ள வீட்டிற்கான வரைபட அனுமதி கேட்டு மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு அனுப்புவதாக புகார் அளித்தார். மேலும் அந்த நிறுவனத்திற்கு சென்று கேட்டபோது 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாகவும் மாநகராட்சி அலுவலகத்தில் வந்து கூறினால் அங்கு 20,000 ரூபாய் கொடுத்துவிட்டு அனுமதி பெற்றுச் செல்லுமாறு கூறுவதாகத் தெரிவித்தார்.

 

Bribery for building permission; Two persons including the interview assistant of the municipal corporation mayor arrested

 

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூபாய் 20,000 ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கடலூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கட்டட வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாநகராட்சி மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமனும் அமர்ந்திருந்த நிலையில், இந்த 20,000 ரூபாய் பணத்தினை பரணியிடமிருந்து மேயரின் உதவியாளர் பெறும்போது அவரையும் கட்டுமான வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை கடலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.

 

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கடலூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து ஆணையர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மேயரின் நேர்முக உதவியாளர் ரகோத்தமன், தனியார் கட்டட வரைபட அனுமதி பெற்றுத் தரும் நிறுவனத்தின் உரிமையாளர் ஆறுமுகத்தையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரது வீடுகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்