
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வடக்கு வீரபாண்டியன் தெருவில் வசித்து வருபவர் குறிஞ்சிச்செல்வன். இவர், விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் தொழில் பயிற்சி கூடத்தில், தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குறிஞ்சிசெல்வனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சென்னையில் உள்ள அவருடைய அண்ணன் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று, அப்பகுதியில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றுவந்த குறிஞ்சிசெல்வனின் உடல் முன்னேற்றம் அடைந்தால், சென்னையில் இருந்து நேற்று மாலை விருத்தாச்சலம் வந்தடைந்தார். தனது மனைவி மற்றும் தாயாருடன் வீட்டுக்கு வந்த குறிஞ்சிசெல்வன், வீட்டைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பூஜை அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து குறிஞ்சிசெல்வன் விருதாச்சலம் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். பிறகு விருதாச்சலம் ஏ.எஸ்.பி அங்கித் ஜெயின் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.