சேலத்தில், ஏரியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென்று சேற்றில் சிக்கியதால் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர்.
சேலம் கன்னங்குறிச்சி கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்தவர் சம்பத். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் பிரசாந்த் (17). இவருடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் பாலாஜி (16). இருவரும் நண்பர்கள். இவர்களில் பிரசாந்த் தற்போது பிளஸ்2வும், பாலாஜி பிளஸ்1ம் முடித்துள்ளனர். இவர்கள் இருவரும், விடுமுறை நாளான சனிக்கிழமையன்று (ஏப். 22) அதே பகுதியைச் சேர்ந்த மணி என்பவருடைய மகன் தமிழ்மணி (13) என்ற சிறுவனுடன் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு குளிக்கச் சென்றனர்.
தமிழ்மணிக்கு நீச்சல் தெரியாததால் அவன், கரை பகுதியிலேயே குளித்துக் கொண்டிருந்தான். மற்ற இருவரும் ஏரியின் நடுப்பகுதிக்கு நீச்சல் அடித்துச்சென்று குளித்தனர். அப்போது திடீரென்று பிரசாந்த்தும், பாலாஜியும் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் வெளியே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். இதைப் பார்த்த சிறுவன் தமிழ்மணி, அவர்களைக் காப்பாற்றுமாறு கூக்குரலிட்டான்.
இதைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஏரிக்குள் வந்து சேர்வதற்குள் பிரசாந்தும், பாலாஜியும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாயினர். தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிறுவர்களின் சடலங்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கன்னங்குறிச்சி பகுதியில் சோகத்தை ஏற்டுத்தி உள்ளது.