ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த நிலையில், இரண்டு மாதங்களுக்குப் பிறகு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூரை சேர்ந்த இவரது உறவினர்கள் ரகுராமன் - ரேவதி தம்பதியினர், தங்களது இரண்டு மகன்களுடன் (ரித்தீஷ்குமார் - 12 வயது, மிதுனேஷ் - 8 வயது) கடந்த வருடம் நவம்பர் 17 ஆம் தேதி திருச்சி முசிறியில் உள்ள உறவினரான ஜெயலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளனர். அதனை அடுத்து அவர்கள் அனைவரும் அருகில் இருந்த காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்ப்பாராத விதமாக சிறுவர்கள் ரித்தீஷ், மிதுனேஷ் இருவரும் நீரில் மூழ்கி உள்ளனர்.
நீரில் மூழ்கிய சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற உறவினர் ஒருவரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் உட்பட 3 பேரையும் தேடும் பணி ஒருவாரமாக நடைபெற்றது. ஆனால் இறுதிவரை சிறுவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக உடல்களைத் தேடும் பணி நடைபெற்று வந்தது. கடைசிவரை சிறுவர்களின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், உடல்களைக் கைப்பற்ற முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு இறுதி சடங்கை செய்துவிடலாம் என முடிவெடுத்த பெற்றோர்கள், அவர்கள் குளித்த அதே காவிரி ஆற்றின் கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் நீரில் மூழ்கிய இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் எலும்புக்கூடுகள் மண்ணில் புதைந்து இருப்பதாக, ஆற்றில் குளிக்கச் சென்ற சிலர் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். உடனே அங்கு சென்ற பெற்றோர்கள், ஆற்றில் கிடந்த எலும்புக்கூடுகளை மீட்டு கரைக்கு எடுத்து வந்தனர். சேகரிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மண்டை ஓட்டில் இருந்த பல் பகுதியைப் பார்த்த சிறுவனின் பாட்டி, அது தனது பேரனுடைய பல்தான் என அடையாளம் காட்டினார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எலும்புக்கூடுகளைப் பெற்றோர்களிடமிருந்து கைப்பற்றி, டிஎன்ஏ பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். 2 மாதத்திற்கு முன்பு ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கிய சிறுவர்கள் உயிரிழந்த நிலையில், அவர்களது எலும்புக்கூடுகள் தற்போது மீட்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.