தாய்ப்பாலை வணிகரீதியாக விற்பதற்கு அனுமதி வழங்குமாறு சில அமைப்புகள் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தை அணுகியிருந்தது. இது தொடர்பான மனுவை விசாரித்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பட்டு ஆணையம், ‘இந்திய உணவுச் சட்டம் 2006ன் படி, தாய்ப்பாலை பதப்படுத்துவதையும், விற்பனை செய்வதையும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, வணிகரீதியாக இந்த நடவடிக்கையில் மேற்கொள்பவர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவர், சட்டவிரோதமாக பாட்டில்களில் அடைத்து தாய்ப்பால் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், முத்தையாவின் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 50 தாய்ப்பால் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி போஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டிருப்பது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.