
சேலம் நீதிமன்றத்தில் அமர்ந்து, விசாரணை நடைமுறைகளை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த போலி வழக்கறிஞர்கள் இருவரை காவல்துறையினர் பிடித்துச்சென்று விசாரித்து வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி - ஏற்காடு சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மாவட்ட தலைமை நீதிமன்றம், அமர்வு நீதிமன்றங்கள், குற்றவியல் நீதிமன்றங்கள், தனி நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றம் என 30க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்குகின்றன. குறிப்பிட்ட ஒரு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அப்போது வழக்கறிஞர்கள் போல கருப்பு அங்கி அணிந்திருந்த இளம்பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் விசாரணை விவரங்களை குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தனர்.
சந்தேகத்தின் பேரில் சக வழக்கறிஞர்கள் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொன்னார்கள். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண் சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த அனிதா (36), மற்றொருவர் ஓமலூரைச் சேர்ந்த சிவக்குமார் (35) என்பதும் தெரிய வந்தது. இவர்களில் அனிதா, பிளஸ்2வும், அந்த இளைஞர் பி.ஏ., பி.எட்., படித்திருப்பதும் தெரியவந்தது.
இவர்களிடம், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தலா 5 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொண்டு, சேலம் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார். அந்த மோசடி நபர்தான் இவர்களுக்கு வழக்கறிஞர்கள் அணியக்கூடிய உடையை வாங்கிக் கொடுத்து, நீதிமன்ற நடைமுறைகளை அறிந்து வரும் பயிற்சிக்காக அனுப்பி வைத்ததாக பிடிபட்ட இருவரும் கூறியுள்ளனர்.
அந்த வழக்கறிஞர், பல பேரிடம் பணம் வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து பிடிபட்ட இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.