திருமணம் செய்து கொள்ளாமல் 70 வயது வரை துணையின்றி தனியாக வாழ்ந்து இறந்த மூதாட்டியை, தான் உயிரோடு இருக்கும்போது கட்டிவைத்த கல்லறையில் ஊர் மக்கள் அடக்கம் செய்தனர்.
குமரி மாவட்டம், சூழால் ஊராட்சி பல்லுளி பகுதியைச் சேர்ந்த ரோசி (70), திருமணம் செய்துகொள்ளாமல், குடும்பத்தினருடனும் தொடர்பில்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். சிறு வயதிலேயே தாய், தந்தை இறந்த நிலையில், உடன் பிறந்தவர்களும் ரோசியிடம் எந்தத் தொடர்பும் வைத்து கொள்ளாமல் தனித்தனியாக சென்று விட்டனர். இதனால் ஆரம்பத்தில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பசியாறி வாழ்ந்து வந்த ரோசி, பின்னர் வீட்டு வேலைகள் செய்து வந்தார். இதனால் சிறு வயதில் இருந்தே தனிமையாக வாழ்ந்து வந்தவருக்கு அந்த வாழ்க்கை பிடித்துப் போகவே திருமண வயது வந்த பின்பும் திருமணம் வேண்டாம் என்று தனிமையிலேயே வாழ்ந்து வந்தார்.
எல்லோரையும் போல் முதுமையும் அவரை தொற்றிக்கொள்ள கடந்த 12 ஆண்டுகளாக 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார். அந்த 12 ஆண்டுகளில் ஒரு நாள் கூட அவர், வேலைக்கு விடுப்பு எடுத்தது இல்லை. இதையொட்டி ஊராட்சி நிர்வாகமும் ரோசியை பாராட்டி உள்ளது.
ரோசி, தனது வீட்டு முற்றத்தின் அருகில் கிடக்கும் தனக்கு சொந்தமான ஒன்றரை சென்ட் இடத்தில் தான் உயிரோடு இருக்கும் போதே கல்லறை கட்ட முடிவு செய்து ஊராட்சியிடம் இருந்து அனுமதியும் வாங்கினார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுக்கு முன் 50 ஆயிரம் மதிப்பில் ஒரு கல்லறையை கட்டினார். தான் இறந்த போது உள்ளே கொண்டு வைப்பதற்காக ஒரு வாசலையும் போட்டு அதை அடைத்து வைத்திருந்தார். மேலும், ஊரில் உள்ள இளைஞர்களிடம் நான் இறந்து போனால் என்னை இந்த கல்லறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ரோசி, கடந்த ஒரு வாரமாக உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்குள்ளே படுத்த படுக்கையாக கிடந்தார். இந்த நிலையில், 16-ம் தேதி காலையில் வீட்டுக்குள் இருந்து துா்நாற்றம் வரவே பக்கத்தில் உள்ள ஒருவர் ரோசி வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது ரோசி இறந்து உடல் அழுகிய நிலையில் கிடந்தது.
இதையடுத்து அங்கு ஊர் மக்கள் திரண்டனர். பின்னர் இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து ரோசியின் உடல் அவர் கட்டி வைத்தியிருந்த கல்லறையில் ஊராட்சி மன்ற தலைவர் இவான்ஸ், 100 நாள் வேலை தொழிலாளர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சொந்த பந்தங்கள் இல்லாமல் 70 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்த ரோசியின் அடக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ரோசியின் மறைவு அந்தப் பகுதி மக்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.