



உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவர், செப்டம்பர் மாதம் 14 -ஆம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நாக்கு வெட்டப்பட்டு, முதுகெலும்பு முறிந்த நிலையில் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்த அந்தப் பெண், சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது என பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று மாலை, சென்னை சின்னமலை ராஜிவ் காந்தி சிலையிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி தி.மு.க மகளிர் அணி சார்பாக கனிமொழி எம்.பி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இதனை எதிர்க்கும் வகையிலும் கடந்த ஜூலை மாதம் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் தற்கொலை செய்துகொண்ட பெண்ணுக்கு நீதிகேட்கும் வகையிலும் பா.ஜ.கவின் மகளிரணி உறுப்பினரும் டி.வி நடிகையுமான ஜெயலட்சுமி தனது 10 ஆதரவாளர்களுடன் திடீரென கிண்டி சின்னமலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.