திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் தேங்காய் பட்டறை பகுதியில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா பிரிவில் அனுமதியின்றி தொடர்ந்து மணல் அள்ளி விற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட வாணியம்பாடி வட்டாட்சியர் மோகன் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி எந்திரத்தை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்பொழுது ஜேசிபி எந்திரத்தை மீட்டு வாணியம்பாடி கிராமிய காவல் நிலையம் கொண்டு வரும் வழியில் வாணியம்பாடி அடுத்த துறையேறி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சிவக்குமார் என்பவர் வட்டாட்சியர் வாகனத்தையும் ஜேசிபியையும் வழிமறித்து வாகனத்தை விடுவிக்கும்படி மிரட்டல் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன வருவாய்த் துறை அதிகாரிகள் உடனடியாக வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற வாணியம்பாடி கிராமிய காவல் உதவியாளர் மஞ்சுநாதன், அங்கிருந்து ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொள்ள சென்ற பொழுது வட்டாட்சியர் மற்றும் வருவாய்த் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த துறையேறி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் அன்பரசன் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி நிர்வாக அலுவலர் மீரா புகார் அளித்துள்ளார்.
ஜேசிபி ஓட்டுநர் பிரகாஷ் என்பவரைக் கைது செய்த வாணியம்பாடி கிராம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.