நன்றாகச் சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளைச் சாப்பிட்டால், பறவைக் காய்ச்சல் பரவாது என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், "பறவைக் காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை ஆய்வுசெய்ய 26 இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோழி, வாத்துகள் தமிழகத்திற்குள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நன்றாகச் சமைத்த கோழி இறைச்சி, முட்டைகளைச் சாப்பிடலாம்; பறவைக் காய்ச்சல் பரவாது. கோழி இறைச்சி விற்பனை செய்யும் இடத்தில் நோயின் தாக்கம் உள்ளதா என்பதைக் கண்காணிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.