அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஈடுபாட்டுடன் பணிபுரிகிறார்கள் சில ஆசிரியர்கள் பள்ளிக்கு விசிட் அடித்து விட்டு அவர்கள் நடத்தும் தொழிலை பார்க்கப் போகிறார்கள். இதை தடுக்கும் வகையில் தான் தமிழக அரசின் கல்வித்துறை ஆசிரியர்களின் தினசரி வருகை பதிவேட்டில் கையெழுத்து போடுவதிலிருந்து கை ரேகை வைக்கும் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்தியது. ஈரோடு மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை பதிவை உறுதி செய்ய பயோ மெட்ரிக் முறை இன்று முதல் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் ஆசிரியர்கள் வருகையை அதிகாரிகள் உறுதி செய்யும் வகையில் பயோ மெட்ரிக் முறை அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளில் தற்போதைய கல்வியாண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடுநிலைப்பள்ளிகளில் நேற்று 3.10.19 முதல் அமுல்படுத்தப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 270 மாநகராட்சி, நகராட்சி நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு ஏற்கனவே பயோ மெட்ரிக் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவை தயார் நிலையில் இருந்தது. இன்று முதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. இதன் அடுத்த கட்டமாக விரைவில் துவக்க பள்ளிகளுக்கும் பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது பற்றி ஈரோடு மாவட்ட கல்வி அதிகாரி முத்து கிருஷ்ணன் கூறுகையில் "ஈரோடு கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி என அரசு, அரசு உதவி பெறும் நடுநிலை பள்ளிகளில் இன்று முதல் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இனி வருகை பதிவேட்டிற்கு மாறாக பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இவர்களின் வருகையை தலைமை அதிகாரிகள் கண்காணிப்பர் என்றார்.